×

பூம்ரா வேகத்தில் சரிந்தது ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் : ஒரே நாளில் 15 விக்கெட்

மெல்போர்ன்: இந்திய அணியுடனான 3வது டெஸ்டில், ஜஸ்பிரித் பூம்ராவின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்து திணறினாலும்,  வலுவான முன்னிலை பெற்றுள்ளதால் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அறிமுக வீரர் மயாங்க் அகர்வால் 76, புஜாரா 106, கேப்டன் கோஹ்லி 82, ரகானே 34, பன்ட் 39, ரோகித் ஷர்மா 63* ரன் விளாசினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்திருந்தது. ஹாரிஸ் 5, பிஞ்ச் 3 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பிஞ்ச் 8 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் அகர்வால் வசம் பிடிபட்டார். ஹாரிஸ் 22 ரன் எடுத்த நிலையில், பூம்ரா பந்துவீச்சில் இஷாந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 21 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த ஷான் மார்ஷ் 19, டிராவிஸ் ஹெட் 20 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா 92 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

மிட்செல் மார்ஷ் 9, கம்மின்ஸ் 17, கேப்டன் டிம் பெய்ன் 22 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, லயன் மற்றும் ஹேசல்வுட் இருவரும் பூம்ராவின் அசத்தலான பந்துவீச்சில் டக் அவுட்டாகினர். ஆஸ்திரேலியா 66.5 ஓவரில் 151 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. ஸ்டார்க் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 15.5 ஓவரில் 4 மெய்டன் உட்பட 33 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 2, இஷாந்த், ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் 292 ரன் முன்னிலை பெற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. விஹாரி - அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28 ரன் சேர்த்தது. விஹாரி 13 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் கவாஜா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த புஜாரா, கேப்டன் கோஹ்லி இருவரும் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஹாரிஸ் வசம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாக, இந்தியா 28 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

ரகானே 1 ரன் மட்டுமே எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பெய்ன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரோகித் ஷர்மாவும் அதிக நேரம் நீடிக்கவில்லை. 18 பந்துகளை சந்தித்த அவர் 5 ரன் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் ஷான் மார்ஷ் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்தியா 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்துள்ளது (27 ஓவர்). அகர்வால் 28 ரன், ரிஷப் பன்ட் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 6 ஓவரில் 2 மெய்டன் உட்பட 10 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹேசல்வுட் ஒரு விக்கெட் எடுத்தார். கை வசம் 5 விக்கெட் இருக்க, இந்தியா 346 ரன் முன்னிலையுடன் இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கி விளையாடுகிறது. ஆஸி. அணி 2வது இன்னிங்சில் மிக சவாலான இலக்கை துரத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pacer ,Boomra ,Australia ,India , Boomra pacer, pushed Australia ,win India's brightness,15 wickets in one day
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...